|


அன்பே
சிவம்...Om Namasivaya
தீபாவளி
நமக்குள் இருக்கும் இறைவன்; ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான்.
இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே
தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம்
கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை
அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும்
இருக்கிறது. அதாவது நரகாசுரன் என்ற தீமையை அழித்த நாள்.
அதனால் அன்று தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து
புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை
சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான்
சிறப்பானதாக இருக்கும்.
தீபாவளியை எப்படிக் கொண்டாடுவது சிறப்பாக இருக்கும் என்று
பார்ப்போம். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் நித்திரையில்
இருந்து எழுந்து எண்ணை தேய்த்து, பின் மருத்து நீர்
தேய்த்து பின் குளிக்க வேண்டும். இதில் குளிக்கும்
நீரைப்பற்றி நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு
விடயம் உள்ளது. கங்கையில் குளித்தால் நாம் செய்த பாவங்கள்
எல்லாம் தீரும் என்பது விதி. எல்லாரினாலும் கங்கைக்கரைக்கு
சென்று குறிப்பாக தீபாவளி அன்று நீராடுவது என்பது
முடியாத காரியமாகும். இதற்கு மாற்றாக நாம் என்ன செய்யலாம்
என்று பார்ப்போம். ஒரு வாளியில் தண்ணீரை நிரப்பி இரண்டு
கைகளையும் வாளியின் மேல் உள்ளங்கை கீழிருக்குமாறு
பிடித்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை பதினாறு தடவை
குறைந்த பட்சம் மூன்று தடவை ஆவது கூறியபின் அந்த நீரில்
நீராட வேண்டும்.
மந்திரம்:-
கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே
சந்நிதம் குரு.
குளித்தபின் குடும்பமாக பூஜை அறையில் பஞ்சமுக தீபம் ஏற்றி
தீபத்திற்கு விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து தூப,
தீப, ஆராதனை செய்து வழிபாடுகள் செய்த பின் குலதெயவம்,
இச்ட தெய்வங்களை தூப, தீப, ஆராதனை செய்து வழிபட வேண்டும்.
பின் விபூதி, சந்தனம், குங்குமம் தரித்துக் கொண்டு புத்தாடைகளை
அணிய வேண்டும். சில இடங்களில் குளித்தபின் புத்தாடைகளை
அணிந்து அதன்பின் சாமி கும்பிடும் வழக்கமும் உள்ளது.
பின்னர் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் மற்றவர்கள் ஆசிர்வாதம்
வாங்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒருவரிற்கு ஒரவர் வாழ்த்து
தெரிவித்துக் கொள்ளலாம்.
அதன் பின் வீட்டிலுள்ள
எல்லோருமாக சேர்ந்திருந்து இனிப்புவகைகள் பலகாரங்கள்
போன்றவற்றை உண்டு மகிழவேண்டும்.
இதன் பின்னர் பட்டாசு வெடித்தல் உறவினர் வீடுகளிற்கு
செல்லுதல் என இன்பமாக தீபாவளியினை சிறப்பாக கொண்டாட
வேண்டும்.
இந்த இனிய தீபாவளித் திருநாளில் சகல வளமும் பெற்று வாழ
எல்லாம் வல்ல பரம்பொருள் அருள் புரியட்டும் என வாழ்த்துகிறோம்
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
வாழ்க வளமுடன்
மித்ராசாமி SMP-DA
|